தமிழ்

குருவடித்தாமரை…!

-சீனிவாசன் இராமானுஜம்

பகுதி – 1

குரு என்பவர் யார்?

 

“நீ என்னிடம் வருவாய் என எனக்குத்தெரியும் நரேன்” என்றார் இராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தரைப்பார்த்து.

அப்போதுதான் பரமஹம்சர் விவேகானந்தரைப்பார்க்கிறார்.

அந்த முதல் பார்வையிலேயே அவருக்குத்தெரிந்துவிடுகிறது இவர்தான் நம் சீடரென்று.

அதன்பிறகு எத்தனையோ உரையாடல்கள்; உரசல்கள்; பேச்சுவார்த்தைகள்; எத்தனை இருந்தும் இராமகிருஷ்ணர் சொன்னதுதான் பலித்தது.

சுவாமி விவேகானந்தர் தான் அவருடைய முதன்மைச் சீடர் ஆனார்.

அதற்குப்பிறகு நடந்ததெல்லாம் வரலாறு.

இங்கே தான் நமக்கு ஒரு கேள்வி இருக்கிறது.

குரு என்பவர் யார்?

நம் வாழ்க்கைக்குள் குரு என்பவர் என்ன செய்கிறார்? 

குரு என்பவர் நிச்சயம் நம் வாழ்வுக்கு அவசியமா?

குருவிற்கும் ஆன்மீகத்திற்கும் சம்பந்தம் உண்டா?

இப்படி பல கேள்விகள் இருக்கின்றன. 

இந்தக்கேள்விகள் எல்லாம் அர்த்தமானவையா அல்லது அர்த்தமற்றவையா என்பதை அறிந்துகொள்வதற்குக்கூட “குரு” நமக்கு அவசியமாகிறார்.

குரு என்பவர் யார் என்ற கேள்விக்குள் நாம் புகுமுன்னர் சில கருத்துக்களை நாம் நமக்குள் அசைபோட்டுவிடுவது நல்லது. இது ஒரு தெளிவான பாதைக்குள் நம்மை அழைத்துச்செல்ல வழிவகுக்கும்.

1. ஆன்மிகம் என்றாலே நமக்கு வயதாகிவிட்டது என்ற தவறான அணுகுமுறை ஒன்று உள்ளது. அல்லது வயதானவர்களுக்குத்தான் ஆன்மிகம் பற்றிப்பேசவோ அல்லது அது பற்றி சிந்திக்கவோ வேண்டும் தவறான புரிதல் இங்கே உள்ளது.

2. நம் வீட்டிலே ஒரு பொதுவான அம்சம் – நம் வீட்டுப்பெரியவர்கள்தான் சாமி கும்பிடும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். சிறியவர்களை அலல்து குழந்தைகளை அதில் ஈடுபடுத்துவதில்லை அல்லது எல்லா வேலையும் முடிந்த பிறகு, கடைசி விஷயமாக அவர்களை அழைத்து, சாமி கும்பிட வைப்பார்கள். 

   வீட்டின் பூஜை அறை என்பதில் இருக்கும் நுணுக்கங்களை நம் குழந்தைகளுக்கும் சொல்லித்தரும் கலை…அடுத்த தலைமுறைக்கு கடத்துகின்ற, அந்தப்பெரும்பான்மை மன நிலையை அது இழந்திருக்கிறது.

3. ஆன்மிகம் சம்பந்தமாகப்பேசினாலோ அல்லது அது குறித்த சந்தேகங்களைத் தெளிவுபடுத்த சத்சங்கங்களை நாடினாலோ அல்லது ஒத்த அலையுள்ள ஒரு குழுவுக்குள் நம் சந்தேகங்களை நிவர்த்திசெய்துகொண்டாலோ அல்லது இந்தப்பழக்கத்தைத்தொடர் பழக்கமாக வைத்திருந்தாலோ நமக்கு “என்னவோ” நடந்துவிட்டது என்று எண்ணும் மக்கள் கூட்டம் இங்கே அதிகம். 

4. அதேபோல, நமக்கு பக்தி சம்பந்தப்பட்ட, ஆன்மிகம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அதிகம் தெரியும் எனும் அலட்டல் உள்ள ஆசாமிகளுக்கு இங்கே குறை ஒன்றுமில்லை. அவர்கள் எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள்.

5. கடவுளின் தேடல் அல்லது பக்தி குறித்த தெளிவான விளக்கங்கள் அல்லது நம் ஆன்மிகம் என்ன என்பது பற்றி ஆள் ஆளுக்கு ஒரு விஷயத்தை வைத்திருக்கிறோம். எதையும் அதாவது பெரும்பான்மையான மக்கள் ஒரு ஒழுங்குமுறை இல்லாமல் அவரவர் கருத்துக்களை தெளித்துச்செல்லும் ஒரு இயந்திரமாக இருப்பதை நம் கண்கூடாகப்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

6. நாம் வேதங்களையோ அது குறித்த பொருளையோ உள்வாங்கிக்கொள்ளாமல், நம் வழிபாடு முறை அனைத்தும் ஏதோ ஒரு பலனை எதிர்பார்த்து, மனம் முழுதும் அந்தப்பலனைக்குறித்தே நினைத்து… இப்படித்தான் நம் தெய்வவழிபாடு இப்போது இருக்கிறது. இருந்துகொண்டிருக்கிறது. 

 நம் பக்தி என்பது ஒரு எதிர்பார்ப்பில் அடங்கிவிடுவதாக இருக்கிறது. கடவுளோ அல்லது அது குறித்த தத்துவமோ ஒருவித எதிர்பார்ப்பில் அல்லது பலனில் அடங்கிவிடுவதாக இருந்தால், நம்முடைய பக்தி என்பது எதை நோக்கி இருக்கிறது’ என்கிற கேள்வி வருகிறது.

7. நம் ஒட்டுமொத்த ஆன்மீக அறிவு அல்லது பக்தி எதைச்சார்ந்ததாக இருக்கிறது’ என்கிற கேள்வி நமக்குள் எழுந்தால் அது ஒரு நல்ல அறிகுறி என்றே வைத்துக்கொள்ளலாம். ஏனெனில், அந்த நேர்மை நமக்கு மிகப்பெரிய பலமாக அல்லது பாலமாக அமையும், ஆன்மிகத்தை அறிந்துகொள்ள.

8. நமது பொருளாதார நெருக்கடிகளால் அடிக்கடி கேலிக்குரிய அம்சமாகவும் இந்த ஆன்மிகம் இருக்கிறது அல்லது அதை நாம் அப்படிப்பார்க்கிறோம் என்பதை நாம் ஒப்புக் கொண்டுதான் ஆகவேண்டும். ஆனால், ஆன்மீகமோ அல்லது  அது சார்ந்த கடவுளோ அல்லது மதமோ அதன் புனிதத்தின் மீது அல்லது அந்தப்புனிதத்தன்மையின் மீது எந்தக்களங்கமுமில்லாமல் ஒரு காட்டாற்று வெள்ளம் போல ஒரு இடத்தில் அமைதியாகவும் சில இடத்தில் அடங்காததாகவும் பாய்ந்தோடிக்கொண்டே இருக்கிறது.

9. நமக்கு ஒரு தேவை இருந்தால்தான் கடவுள் அல்லது பக்தி இதன்மீது ஒரு ஈர்ப்பு வருகிறது என்கிற கருத்து இங்கே நிலவுகிறது. எதனின் தேவை அதைத்தீர்மானிக்கிறது என்பதே இங்கே முதன்மையான கேள்வியாக இருக்கிறது.

10. தினமும் ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒவ்வொரு கடவுளை வழிபடுவது அல்லது பல்வேறு விதமான பரிகாரங்களைச்செய்வது அல்லது நம்முடைய அன்றாட வாழ்வில் நடக்கும் அழுத்தங்களுக்கெல்லாம் கடவுள்தான் காரணம் என்று புலம்பித்தள்ளுவது – இதெல்லாம் இந்த ஆன்மீகப்பாதையில் எப்படி, எங்கே கொண்டு செல்லும்? இப்படிச்செய்வதால் நல்லது நடக்குமா? அல்லது கெட்டது நடக்குமா?

11. நமக்கு நல்லது நடந்தால் கடவுளை நம்புவதும் தீயவை நடந்தால் கடவுளை நிந்திப்பதும் நம்முடைய வாழ்வின் ஒரு அங்கமாக இருப்பதை நாம் எல்லோரும் ஒப்புக்கொண்டுள்ளதான் வேண்டும். நிச்சயம் இது இப்படித்தான் நடக்க வேண்டுமா? 

12. நம் எல்லாப்பிரார்த்தனைகளும் நம்மை எங்கே கொண்டுசெல்கின்றன? பொதுவாக நம் பிரார்த்தனைகள் ஒரு வேண்டுகோளை அடிப்படையாகக்கொண்டுதான் இயங்குகிறது. நாமும் ஒரு தேவையை முன்னிறுத்தித்தான் கடவுளை வழிபாடு செய்கிறோம். 

பொதுவாக அந்தப்பிரார்த்தனைகள் எல்லாமே ஒரு சுயநல நோக்கத்தை அடிப்படையாகக்கொண்டதாகவே இருக்கிறது. இதுவும் இப்படித்தான் இருக்க வேண்டுமா? அல்லது நம் பிரார்த்தனைகள் அனைத்தும் நமக்காக மட்டும்தானா?

13. நம் பிரச்சனைகள், நாம் சந்திக்கும் சோதனைகள், சவால்கள் – இப்படித்தான் நாம் ஆன்மிகம் பக்கம் ஒதுங்குகிறோம் என்கிற அடிப்படை உண்மை நமக்கு சில நேரம் வெட்கம் கொள்ளச்செய்கிறது. இதை எப்படி அணுகுவது? ஆன்மீகமும் சோதனைகள் நிறைந்தது என்று எல்லாரும் சொல்கிறார்களே… அப்படி என்றால் நாம் எங்கே தஞ்சம் புகுவது? 

இவையெல்லாம் அடிப்படை கேள்விகள். நமக்குள் இருக்கும் அடிப்படை உண்மைகள்.

இதையெல்லாம் யார் தீர்த்துவைப்பார்கள்? எங்கே போவது?

யாரிடம் சொல்வது? யாரை நம்புவது? மனிதர்களிடம் போவதா? தெய்வத்திடம் போவதா? அல்லது குருவிடம் போவதா?

இன்னும் இன்னும் பல நூறு கேள்விகள் வந்துபோகின்றன நமக்குள்.

ஒன்றும் இல்லை…நீங்கள் உங்களுக்குப்பிடித்த கடவுளிடம் கேட்டுக்கொண்டே இருங்கள்…

அதாவது,  நீங்கள் சீடனாகும் தகுதியை வளர்த்துக்கொண்டால்…குரு உங்களைத்தேடி வருவார்!

சரி…நான் சீடனாகும் தகுதியை வளர்த்துக்கொண்டுவிட்டேன்…குருவை எப்படி அடையாளம் கண்டுகொள்வது?
அது ஒரு தெய்வத்தை அடையாளம் கண்டுகொள்வது போலல்லவா?

எப்படிக்கேட்டாலும் நமக்குக்கேள்விதான் மிஞ்சுகிறது. ஒவ்வொரு கேள்விக்குள்ளும் ஒரு கேள்வி இருக்கிறது.

அதற்கும் அந்தக்குருதான் வருவார். நமது கேள்விக்கெல்லாம் விடையாக வருவார்.

நாம் ஒவ்வொரு கேள்வியாகக்கேட்டதற்கெல்லாம் ஒரே பார்வையில் பதிலாகச்சொல்வார்.

அப்படி என்றால், அந்த குரு எப்படி இருப்பார்? எங்கே இருப்பார்? என்னை எப்படி அவர் தேர்ந்தெடுப்பார்?

குரு என்பவர் யார்?

— குருவடித்தாமரை தொடரும்…


 

திருப்பதி சென்று திரும்பி வந்தால். . .

கல்யாண்குமார், பத்திரிகையாளர், எழுத்தாளர், திரைப்பட இயக்குனர்

 

திருப்பதி
திருப்பதி

‘’நாம் நினைத்தால், நினைத்த நேரத்தில் திருப்பதிக்குப் போக முடியாது. அந்த பாலாஜியே  நம்மை அழைப்பார், அப்போதுதான் போக முடியும்’’ என்று அந்த பாலாஜியின் தீவிர பக்தர்கள் சொல்வதுண்டு. என்னைப் பொறுத்தவரை அது உண்மைதான். சென்னைக்கு வந்து செட்டிலாகி பலவருடங்கள் ஆனபிறகும்கூட திருப்பதி பயணம் தள்ளிப் போய்க் கொண்டேயிருந்தது. திடீரென ஒரு நாள் நண்பர் ஒருவர் அழைத்தார். ‘’காரில் தனியாகத்தான் திருப்பதி போகிறேன், நீங்களும் வருகிறீர்களா?’’ ஆகா பாலாஜியே அழைத்து விட்டார், போகாமல் இருக்க முடியுமா? இருந்த சொச்ச வேலைகளையெல்லாம் ஓரங்கட்டி விட்டு அவரோடு அவசர அவசரமாக கிளம்பினேன். அழைத்த  நண்பரின் பெயர்: பெருமாள்! பிள்ளைநிலா என்ற படத்தின் தயாரிப்பாளர். அதன் பின்னர் அவர் பிள்ளைநிலா பெருமாள்’ என்றே அழைக்கப்பட்டார். அதுதான் திருப்பதிக்கு என் முதல் விஜயம். அதனால் அந்தப் பெருமாளின் பெயரை மறக்கவே முடியாது.

அதன்பிறகு இயக்குனர் கே எஸ் ரவிகுமார் அடிக்கடி திருப்பதிக்கு போகக் கூடியவர். அங்கே தரிசனம் முடித்து விட்டு தேவஸ்தானத்திலேயே விற்பனை செய்யப்படும் தங்கக் காசுகளை வாங்கி வந்து சேமித்து வைத்துக் கொள்பவர் (இன்வெஸ்ட்மெண்ட்). தசாவதாரம் திரைக்கதை விவாதத்தில் இருந்தபோது  ’’நாளை அதிகாலை நான் திருப்பதி போகிறேன், நீங்கள் வருகிறீர்களா?’’ என்றார். பாலாஜியின் அழைப்பை யார் வேண்டாம் என்பார்கள்? திருப்பதியில் ரவிகுமாருக்குத் தெரிந்த வினியோகஸ்தர் மூலமாக எங்களை அந்த ஊர் காவல் துறை ஏ.சி. ஒருவர் வந்து அழைத்துப் போனார். பாலாஜியின் அருகிலேயே திவ்ய தரிசனம்.

Gallery

அதன் பிறகு ஒரு நீண்ட இடைவெளி. பாலாஜி ஏனோ என்னை அழைக்கக் காணோம். சரி நாமே முயன்று போய் வரலாமே என்று கிளம்பினேன். அப்போதுதான் தரிசனம் எல்லாம் கணினிமயமாக்கப்பட்டு டிக்கெட்டுகள், குறிப்பிட்ட நேரங்களை பதிவு செய்து ஆன்லைனில் விற்பது தெரிந்தது. முயன்று பார்த்தால் ஒரு மாதத்திற்கு இல்லை என்று காட்டியது. இருந்தாலும் மேல்திருப்பதிவரை கால்கள் பட்டு திரும்பினாலே போதும் என்று மனது சொன்னதால் சென்ட்ரல் ஸ்டேஷனிலிருந்து தனியாக ரயிலில் கிளம்பினேன். காலை ஆறுமணிக்கு ஒரு ரயில். அரக்கோணம், திருத்தணி, வழியாக நான்கு மணி நேரப் பயணம். கீழ்திருப்பதி ரயில்வே ஸ்டேஷனில் இறங்கியதுமே எதிர்புறமிருக்கும் கட்டிடத்தில் தர்ம தரிசனத்திற்கான அனுமதிக்கு சீட் கொடுக்கிறார்கள். ஆதார் கார்டு அவசியம். அதில் நமக்கு தரிசனத்திற்கான நேரம் குறித்துக் கொடுத்து விடுகிறார்கள். அதிலும் விசாரித்தால் அடுத்த நாள் மதியம்தான் இருக்கிறது நேரம் என்றார்கள். சரி, இந்தத் தடவை பாலாஜியை அருகிலிருந்து பார்க்கும் பாக்யம் இல்லையென்று மனசை தேற்றிக் கொண்டு, அவர் இருக்கும் கருவறை கோபுரத்தை ஒரு சுற்று வந்தாலே போதும் என்ற முடிவில் தேவஸ்தான பஸ்ஸில் – கட்டணம் அறுபத்தைந்து – மேல் திருப்பதி போனேன். ரயில்வே ஸ்டேஷன் எதிர்புறமுள்ள பஸ் நிலையத்திலிருந்து ஐந்து நிமிடத்திற்கொரு பஸ் கிளம்புகிறது. அழகான மலைப்பிரதேச பின்னணி. முக்கால்மணி நேரப் பயணம். ரோட்டோரங்களில் குரங்குக் கூட்டங்களின் சேட்டை, குழந்தைகளை குதூகலிக்கச் செய்யும்.

முன்னர் சொன்னது போலவே வெளியிலிருந்தே கருவறை வலம் வந்து,   பிரசாதம் வழங்கும் இடத்திற்கு வந்தேன். முன்பெல்லாம் தரிசனம் முடித்து வருபவர்களுக்கு மட்டுமே லட்டு பிரசாதம் கொடுப்பார்கள். இப்போது லட்டுக்கென தனியாக இருபது கவுண்டர்களைத் திறந்து ஒரு லட்டு ஐம்பது என்றும் அதுவே பெரிய லட்டு இருநூறு ரூபாய் என்றும் கொடுக்கிறார்கள். காசு கொடுத்து நாம் எவ்வளவு லட்டு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். கூடவே துணிப்பைகளும் பத்து ரூபாய்க்கு கிடைக்கும். உங்கள் உறவினர்கள், நண்பர்களிடம் பெருமையாக திருப்பதி போய் வந்தேன் என்று சொல்வதோடு தாராளமாக அவர்களுக்கு லட்டு பிரசாதம் கொடுத்து அவர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தலாம்.

இந்த முறை திருப்பதி போய் வந்ததும் ஆனந்தமான திருப்பம் ஒன்று ஏற்பட்டது. அமெரிக்காவிலிருக்கும் என் மகளும் மருமகளும் பேசினார்கள். ’’அப்பா நீங்களும் அம்மாவும் அமெரிக்கா வர்றதுக்கு ஆன்லைனில் பாஸ்போர்ட், விசா எல்லாம் அப்ளை பண்ணியிருக்கோம். கிளம்பி வாங்க”

ஆகா. நானாவது மதுரை, பெங்களூர் வரை விமானத்தில் ஏறியிருக்கிறேன். என் மனைவி ஏர்போர்ட்டையே பார்த்தது கிடையாது! சரி பாலாஜியின் பார்வை என்று நினைத்துக் கொண்டேன். அமெரிக்காவும் கிளம்பியாச்சு. பயணமும் இனிமையாக அமைந்தது.

அங்கே போய் சில நாட்களிலேயே முகநூல் வழியாக சிவகுமார் அறிமுகமானார். திருப்பதி ஊழியர் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டார். அடக்கத்தின் மறுவடிவம் அவர். அடிக்கடி சாட்டில் பேசிக் கொள்வோம். ’’அமெரிக்காவுல இருந்து வந்ததும் திருப்பதி வாங்க’’ என்று அழைத்தார். அது சாட்சாத் பாலாஜியின் குரலாகவே எனக்கு ஒலித்தது.

ஒருவருட அமெரிக்கப் பயணம் முடிந்து சென்னை வந்ததும், பாலாஜிக்கு ஒரு நன்றி சொல்லி விட்டு வருவோம் என்று நினைத்து மறுபடி மதிய ரயில் பிடித்து திருப்பதி போனேன். 2.15க்கு சென்ட்ரலில் இருந்து கிளம்புகிறது. சரியாக 5.45க்கு கீழ் திருப்பதி. முன்பே உறுதி அளித்தபடி சிவா ரயில்வே ஸ்டேஷனுக்கே வந்து என்னை தன் காரில் அழைத்துக் கொண்டு மேல் திருப்பதி போனார். அங்கே தேவஸ்தான காட்டேஜில் இரவு தங்குவதற்கான ஏற்பாட்டையும் சிவகுமார் செய்திருந்தார். மூன்று படுக்கைகள் கொண்ட அந்த காட்டேஜுக்கு ஒரு நாள் வாடகை நூறு ரூபாய் மட்டுமே. இதுமாதிரி பல வசதிகளுடன் எட்டாயிரம் வரை தங்குவதற்கு கட்டணம் உண்டு. இதையும் முன்கூட்டியே  நீங்கள் ஆன்லைனில் புக் செய்து வரலாம். 

கருவறைக்கு அருகிலேயே அமைந்திருக்கும் காட்டேஜ் என்பதால் அதிகாலை எழுந்து குளித்து முடித்து எட்டு மணிக்கெல்லாம் ரெடியாகி சாமி தரிசனத்திற்கு கிளம்பினோம். வழி நெடுக சிவகுமாருக்கு தேவஸ்தான ஊழியர்கள் கொடுத்த மரியாதை என்னை பிரமிக்க வைத்தது. சூப்ரண்டெண்டண்ட் பதவியோடு அனைத்து ஊழியர்களின் நலனுக்காக நடத்தப்படும் கூட்டுறவு சொசைட்டி வங்கியின் செயலாளராகவும் சிவக்குமார் பதவி வகிப்பதை அப்போதுதான் சொன்னார்.

பதினைந்து நிமிடத்தில் பாலாஜியின் மிக அருகே நான் நிறுத்தப்பட்டேன். சிவகுமாருக்குத் தெரிந்த அர்ச்சகர் எனக்காக சாமியிடம் தீபம் காட்டி பிரசாதம் எடுத்து வந்து கொடுத்தார். ‘’போனமுறை நீ இங்கே வந்து விட்டு என்னை பார்க்க முடியாமல் வருத்தப்பட்டு போனதற்காகத்தான் இந்த சிறப்பு அழைப்பு’’ என்று வெங்கடேச பெருமாள் என்னைப் பார்த்துச் சொல்வதாக இருந்தது, அந்த அருகாமை தரிசனம்!  நன்றி சொல்லி வணங்கி விட்டு வெளியே வந்தேன். இருபது லட்டுகளை ஒரு பையில் போட்டுக் கொடுத்தார் சிவகுமார். அங்கேயே தயாராகும் அதிகாரிகளுக்கான மதிய உணவையும் சாப்பிட வைத்தார் அவர். அவரது அன்பில் நெகிழ்ந்து போனேன்.

அடுத்து நான் இயக்கவிருக்கும் ‘பிளாட்ஃபார்ம் நம்பர் 7’ படத்தின் முதல் போஸ்டர் டிசைன் காப்பி ஒன்றில் ’நல்லதே நடக்கட்டும்’ என்று எழுதி, வேண்டிக் கொண்டு அதை உண்டியலில் செலுத்தி வந்தேன்.

சிவகுமார் தன் காரிலேயே கீழே வந்து அலமேலு மங்கை ஆலயம், கல்யாணப் பெருமாள் ஆலயத்திற்கும் அழைத்துப் போய் அதே மரியாதையுடன் எனக்கு ஆசீர்வாதம் பெற்றுத் தந்தார். மனநிறைவான ஒரு ஆலய தரிசனம்.

 இன்னுமொரு நல்ல திருப்பத்திற்காக காத்திருக்கிறேன். . .

நன்றி அந்த பகவானுக்கே.

 

 

திருத்தலங்கள் TV

 

Total Page Visits: 12610 - Today Page Visits: 9