• Naalaayira Divya Prabhandham

  Naalaayira Divya Prabhandham – Pasuram (86-96)

  Naallayira Divya Prabhandham

  நாலாயிர திவ்ய பிரபந்தம்

   

   

  பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
  பெரியாழ்வார் திருமொழி
  முதற்பத்து
  ஏழாம் திருமொழி – தொடர்சங்கிலிகை
  தளர் நடை நடத்தல், தளர் நடைப் பருவம்
  தொடர் சங்கிலிகைசலார்பிலாரென்னத் தூங்குபொன்மணியொலிப்ப *
  படுமும்மதப்புனல்சோர வாரணம்பையநின்றுஊர்வதுபோல் *
  உடன்கூடிக்கிண்கிணியாரவாரிப்ப உடைமணிபறைகறங்க *
  தடந்தாளிணைகொண்டுசார்ங்கபாணி தளர்நடைநடவானோ. (2)
  1 86
  செக்கரிடைநுனிக்கொம்பில்தோன்றும் சிறுபிறைமுளைபோல *
  நக்கசெந்துவர்வாய்த்திண்ணைமீதே நளிர்வெண்பல்முளையிலக *
  அக்குவடமுடுத்துஆமைத்தாலிபூண்ட அனந்தசயனன் *
  தக்கமாமணிவண்ணன்வாசுதேவன் தளர்நடைநடவானோ.
  2 87
  மின்னுக்கொடியும்ஓர்வெண்திங்களும் சூழ்பரிவேடமுமாய் *
  பின்னல்துலங்கும்அரசிலையும் பீதகச்சிற்றாடையொடும் *
  மின்னில்பொலிந்ததோர்கார்முகில்போலக் கழுத்திணில்காறையொடும் *
  தன்னில்பொலிந்தஇருடீகேசன் தளர்நடைநடவானோ.
  3 88
  கன்னற்குடம்திறந்தாலொத்தூறிக் கணகணசிரித்துவந்து *
  முன்வந்துநின்றுமுத்தம்தரும் என்முகில்வண்ணன்திருமார்வன் *
  தன்னைப்பெற்றேற்குத்தன்வாயமுதம்தந்து என்னைத்தளிர்ப்பிக்கின்றான் *
  தன்னெற்றுமாற்றலர்தலைகள்மீதே தளர்நடைநடவானோ.
  4 89
  முன்னலோர்வெள்ளிப்பெருமலைக்குட்டன் மொடுமொடுவிரைந்தோட *
  பின்னைத்தொடர்ந்ததோர்கருமலைக்குட்டன் பெயர்ந்தடியிடுவதுபோல் *
  பன்னியுலகம்பரவியோவாப் புகழ்ப்பலதேவனென்னும் *
  தன்நம்பியோடப்பின்கூடச்செல்வான் தளர்நடைநடவானோ.
  5 90
  ஒருகாலில்சங்குஒருகாலில்சக்கரம் உள்ளடிபொறித்தமைந்த *
  இருகாலும்கொண்டுஅங்கங்குஎழுதினாற்போல் இலச்சினைபடநடந்து *
  பெருகாநின்றஇன்பவெள்ளத்தின்மேல் பின்னையும்பெய்துபெய்து *
  கருகார்க்கடல்வண்ணன்காமர்தாதை தளர்நடைநடவானோ.
  6 91
  படர்பங்கயமலர்வாய்நெகிழப் பனிபடுசிறுதுளிபோல் *
  இடங்கொண்டசெவ்வாயூறியூறி இற்றிற்றுவீழநின்று *
  கடுஞ்சேக்கழுத்தின்மணிக்குரல்போல் உடைமணிகணகணென *
  தடந்தாளினைகொண்டுசார்ங்கபாணி தளர்நடைநடவானோ.
  7 92
  பக்கம்கருஞ்சிறுப்பாறைமீதே அருவிகள்பகர்ந்தனைய *
  அக்குவடமிழிந்தேறித்தாழ அணியல்குல்புடைபெயர *
  மக்களுலகினில்பெய்தறியா மணிக்குழவியுருவின் *
  தக்கமாமணிவண்ணன்வாசுதேவன் தளர்நடைநடவானோ.
  8 93
  வெண்புழுதிமேல்பெய்துகொண்டளைந்ததோர் வேழத்தின்கருங்கன்றுபோல் *
  தெண்புழுதியாடித்திரிவிக்கிரமன் சிறுபுகர்படவியர்த்து *
  ஒண்போதலர்கமலச்சிறுக்காலுரைத்து ஒன்றும்நோவாமே *
  தண்போதுகொண்டதவிசின்மீதே தளர்நடைநடவானோ.
  9 94
  திரைநீர்ச்சந்திரமண்டலம்போல் செங்கண்மால்கேசவன் தன்
  திருநீர்முகத்துத்துலங்குசுட்டி திகழ்ந்தெங்கும்புடைபெயர *
  பெருநீர்த்திரையெழுகங்கையிலும் பெரியதோர்தீர்த்தபலம்
  தருநீர் சிறுச்சண்ணம்துள்ளம்சோரத் தளர்நடைநடவானோ.
  10 95
  ஆயர்குலத்தினில்வந்துதோன்றிய அஞ்சனவண்ணன்தன்னை *
  தாயர்மகிழஒன்னார்தளரத் தளர்நடைநடந்ததனை *
  வேயர்புகழ்விட்டுசித்தன் சீரால்விரித்தனஉரைக்கவல்லார் *
  மாயன்மணிவண்ணன்தாள்பணியும் மக்களைப்பெறுவார்களே (2).
  11 96
 • Naalaayira Divya Prabhandham

  Naalaayira Divya Prabhandham – Pasuram (75-85)

  Naalaayira Divya Prabhandham

  நாலாயிர திவ்ய பிரபந்தம்

   

  பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
  பெரியாழ்வார் திருமொழி
  முதற்பத்து
  ஆறாம் திருமொழி – மாணிக்கக்கிண்கிணி
  கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்
  மாணிக்கக்கிண்கிணியார்ப்ப மருங்கின்மேல் *
  ஆணிப்பொன்னால்செய்த ஆய்பொன்னுடைமணி *
  பேணிப்பவளவாய் முத்திலங்க பண்டு
  காணிகொண்டகைகளால்சப்பாணி கருங்குழல் குட்டனே! சப்பாணி. (2)
  1 75
  பொன்னரைநாணொடு மாணிக்கக்கிண்கிணி *
  தன்னரையாடத் தனிச்சுட்டிதாழ்ந்தாட *
  என்னரைமேல்நின்றிழிந்து உங்களாயர்தம் *
  மன்னரைமேல்கொட்டாய்சப்பாணி மாயவனே! கொட்டாய்சப்பாணி.
  2 76
  பன்மணிமுத்து இன்பவளம்பதித்தன்ன *
  என்மணிவண்ணன். இலங்குபொற்றோட்டின்மேல் *
  நின்மணிவாய்முத்திலங்க நின்னம்மைதன் *
  அம்மணிமேல்கொட்டாய்சப்பாணி ஆழியங்கையனே! சப்பாணி.
  3 77
  தூநிலாமுற்றத்தே போந்துவிளையாட *
  வானிலாஅம்புலீ! சந்திரா! வாவென்று *
  நீநிலாநின்புகழாநின்ற ஆயர்தம் *
  கோநிலாவக்கொட்டாய்சப்பாணி குடந்தைக்கிடந்தானே! சப்பாணி.
  4 78
  புட்டியில்சேறும் புழுதியும்கொண்டுவந்து *
  அட்டியமுக்கி அகம்புக்கறியாமே *
  சட்டித்தயிரும் தடாவினில்வெண்ணெயும்உண் *
  பட்டிக்கன்றே! கொட்டாய்சப்பாணி பற்பநாபா! கொட்டாய்சப்பாணி.
  5 79
  தாரித்துநூற்றுவர் தந்தைசொல்கொள்ளாது *
  போருத்துவந்து புகுந்தவர்மண்ணாள *
  பாரித்தமன்னர்படப் பஞ்சவர்க்கு அன்று
  தேருய்த்தகைகளால்சப்பாணி தேவகிசிங்கமே! சப்பாணி.
  6 80
  பரந்திட்டுநின்ற படுகடல் தன்னை *
  இரந்திட்டகைம்மேல் எறிதிரைமோத *
  கரந்திட்டுநின்ற கடலைக்கலங்க *
  சரந்தொட்டகைகளால்சப்பாணி சார்ங்கவிற்கையனே! சப்பாணி.
  7 81
  குரக்கினத்தாலே குரைகடல்தன்னை *
  நெருக்கிஅணைகட்டி நீள்நீரிலங்கை *
  அரக்கர்அவிய அடுகணையாலே *
  நெருக்கியகைகளால்சப்பாணி நேமியங்கையனே! சப்பாணி.
  8 82
  அளந்திட்டதூணை அவன்தட்ட ஆங்கே
  வளர்ந்திட்டு வாளுகிர்ச்சிங்கவுருவாய் *
  உளந்தொட்டிரணியன் ஒண்மார்வகலம் *
  பிளந்திட்டகைகளால்சப்பாணி பேய்முலையுண்டானே! சப்பாணி.
  9 83
  அடைந்திட்டுஅமரர்கள் ஆழ்கடல்தன்னை *
  மிடைந்திட்டு மந்தரம்மத்தாகநாட்டி *
  வடம்சுற்றிவாசுகி வன்கயிறாக *
  கடைந்திட்டகைகளால்சப்பாணி கார்முகில்வண்ணனே! சப்பாணி.
  10 84
  ஆட்கொள்ளத்தோன்றிய ஆயர்தங்கோவினை *
  நாட்கமழ்பூம்பொழில் வில்லிபுத்தூர்ப்பட்டன் *
  வேட்கையால்சொன்ன சப்பாணிஈரைந்தும் *
  வேட்கையினால்சொல்லுவார் வினைபோமே. (2)
  11 85
 • Naalaayira Divya Prabhandham

  Naalaayira Divya Prabhandham – Pasuram (64-74)

  Naalaayira Divya Prabhandham

  நாலாயிர திவ்ய பிரபந்தம்

   

  பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
  பெரியாழ்வார் திருமொழி
  முதற்பத்து
  ஐந்தாம் திருமொழி – உய்யவுலகு
  தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்
  உய்யஉலகுபடைத்துண்டமணிவயிறா!
  ஊழிதோறூழிபலஆலினிலையதன்மேல் *
  பையஉயோகுதுயில்கொண்டபரம்பரனே!
  பங்கயநீள்நயனத்துஅஞ்சனமேனியனே! *
  செய்யவள்நின்னகலம்சேமமெனக்கருதிச்
  செல்வுபொலிமகரக்காதுதிகழ்ந்திலக *
  ஐய! எனக்குஒருகால் ஆடுகசெங்கீரை
  ஆயர்கள்போரேறே! ஆடுகஆடுகவே. (2)
  1 64
  கோளரியின்னுருவங்கொண்டுஅவுணனுடலம்
  குருதிகுழம்பியெழக்கூருகிரால்குடைவாய்! 
  மீளஅவன்மகனை மெய்ம்மைகொளக்கருதி
  மேலையமரர்பதிமிக்குவெகுண்டுவர *
  காளநன்மேகமவைகல்லொடு கால்பொழியக்
  கருதிவரைக்குடையாக்காலிகள் காப்பவனே!
  ஆள! எனக்குஒருகால் ஆடுகசெங்கீரை
  ஆயர்கள்போரேறே! ஆடுகஆடுகவே.
  2 65
  நம்முடைநாயகனே. நான்மறையின்பொருளே1
  நாவியுள்நற்கமலநான்முகனுக்கு ஒருகால்
  தம்மனையானவனே! தரணிதலமுழுதும்
  தாரகையின்னுலகும் தடவிஅதன்புறமும் *
  விம்மவளர்ந்தவனே! வேழமும்ஏழ்விடையும்
  விரவியவேலைதனுள்வென்றுவருமவனே! *
  அம்ம! எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
  ஆயர்கள்போரேறே! ஆடுகஆடுகவே.
  3 66
  வானவர்தாம்மகிழவன்சகடமுருள
  வஞ்சமுலைப்பேயின் நஞ்சமதுஉண்டவனே! *
  கானகவல்விளவின் காயுதிரக்கருதிக்
  கன்றதுகொண்டெறியும் கருநிறஎன்கன்றே! *
  தேனுகனும்முரனும்திண்திறல்வெந்நரகன்
  என்பவர்தாம்மடியச்செருவதிரச் செல்லும் *
  ஆனை! எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
  ஆயர்கள்போரேறே! ஆடுகஆடுகவே.
  4 67
  மத்தளவும்தயிரும்வார்குழல்நன்மடவார்
  வைத்தனநெய்களவால்வாரிவிழுங்கி * ஒருங்கு
  ஒத்தஇணைமருதம் உன்னியவந்தவரை
  ஊருகரத்தினொடும் உந்தியவெந்திறலோய்! *
  முத்தினிளமுறுவல் முற்றவருவதன்முன்
  முன்னமுகத்தணியார் மொய்குழல்களலைய *
  அத்த! எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
  ஆயர்கள்போரேறே! ஆடுகஆடுகவே.
  5 68
  காயமலர்நிறவா! கருமுகில்போலுருவா!
  கானகமாமடுவில் காளியனுச்சியிலே *
  தூயநடம்பயிலும் சுந்தரஎன்சிறுவா!
  துங்கமதக்கரியின் கொம்புபறித்தவனே! *
  ஆயமறிந்துபொருவான்எதிர்வந்தமல்லை
  அந்தரமின்றியழித்தாடிய தாளிணையாய்! *
  ஆய! எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
  ஆயர்கள்போரேறே! ஆடுகஆடுகவே.
  6 69
  துப்புடையார்கள்தம்சொல்வழுவாதுஒருகால்
  தூயகருங்குழல்நல்தோகைமயிலனைய *
  நப்பினைதன்திறமாநல்விடையேழவிய
  நல்லதிறலுடையநாதனும்ஆனவனே! *
  தப்பினபிள்ளைகளைத்தனமிகுசோதிபுகத்
  தனியொருதேர்கடவித்தாயொடுகூட்டிய என்
  அப்ப! எனக்குஒருகால் ஆடுகசெங்கீரை
  ஆயர்கள்போரேறே! ஆடுகஆடுகவே.
  7 70
  உன்னையும்ஒக்கலையில்கொண்டுதமில்மருவி
  உன்னொடுதங்கள் கருத்தாயினசெய்துவரும் *
  கன்னியரும்மகிழக்கண்டவர்கண்குளிரக்
  கற்றவர்தெற்றிவரப் பெற்றஎனக்குஅருளி *
  மன்னுகுறுங்குடியாய்! வெள்ளறையாய்! மதிள்சூழ்
  சோலைமலைக்கரசே! கண்ணபுரத்தமுதே! *
  என்னவலம்களைவாய்! ஆடுகசெங்கீரை
  ஏழுலகும்முடையாய்! ஆடுகஆடுகவே. (2)
  8 71
  பாலொடுநெய்தயிர்ஒண்சாந்தொடுசண்பகமும்
  பங்கயம்நல்லகருப்பூரமும்நாறிவர *
  கோலநறும்பவளச்செந்துவர்வாயினிடைக்
  கோமளவெள்ளிமுளைப்போல்சிலபல்லிலக *
  நீலநிறத்தழகாரைம்படையின் நடுவே
  நின்கனிவாயமுதம்இற்றுமுறிந்துவிழ *
  ஏலுமறைப்பொருளே! ஆடுகசெங்கீரை
  ஏழுலகும்முடையாய்! ஆடுகஆடுகவே.
  9 72
  செங்கமலக்கழலில்சிற்றிதழ்போல்விரலில்
  சேர்திகழாழிகளும்கிண்கிணியும் அரையில்
  தங்கியபொன்வடமும் தாளநன்மாதுளையின்
  பூவொடுபொன்மணியும் மோதிரமும்கிறியும் *
  மங்கலஐம்படையும் தோல்வளையும்குழையும்
  மகரமும்வாளிகளும் சுட்டியும்ஒத்திலக *
  எங்கள்குடிக்கரசே! ஆடுகசெங்கீரை
  ஏழுலகும்முடையாய்! ஆடுகஆடுகவே.
  10 73
  அன்னமும்மீனுருவும்ஆளரியும்குறளும்
  ஆமையுமானவனே! ஆயர்கள்நாயகனே! *
  என்அவலம்களைவாய்! ஆடுகசெங்கீரை
  ஏழுலகும்முடையாய்! ஆடுகவாடுகவென்று *
  அன்னநடைமடவாள்அசோதையுகந்தபரிசு
  ஆனபுகழ்ப்புதுவைப்பட்டனுரைத்ததமிழ் *
  இன்னிசைமாலைகள்இப்பத்தும்வல்லார் உலகில்
  எண்திசையும்புகழ்மிக்குஇன்பமதெய்துவரே. (2)
  11 74
 • Naalaayira Divya Prabhandham

  Naalaayira Divya Prabhandham – Pasuram (54 – 63)

  பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
  பெரியாழ்வார் திருமொழி
  முதற்பத்து
  நான்காம் திருமொழி – தன் முகத்து
  சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்
  தன்முகத்துச்சுட்டி தூங்கத்தூங்கத்தவழ்ந்துபோய் *
  பொன்முகக்கிண்கிணியார்ப்பப் புழுதியளைகின்றான் *
  என்மகன்கோவிந்தன்கூத்தினை இளமாமதீ!
  நின்முகம்கண்ணுளவாகில் நீஇங்கேநோக்கிப்போ. (2)
  1 54
  என்சிறுக்குட்டன் எனக்கோரின்னமுதுஎம்பிரான் *
  தன்சிறுக்கைகளால் காட்டிக்காட்டியழைக்கின்றான் *
  அஞ்சனவண்ணனோடு ஆடலாடஉறுதியேல் *
  மஞ்சில்மறையாதே மாமதீ! மகிழ்ந்தோடிவா.
  2 55
  சுற்றும்ஒளிவட்டம் சூழ்ந்துசோதிபரந்தெங்கும் *
  எத்தனைசெய்யினும் என்மகன்முகம்நேரொவ்வாய் *
  வித்தகன்வேங்கடவாணன் உன்னைவிளிக்கின்ற *
  கைத்தலம்நோவாமே அம்புலீ! கடிதோடிவா.
  3 56
  சக்கரக்கையன் தடங்கண்ணால்மலரவிழித்து *
  ஒக்கலைமேலிருந்து உன்னையேசுட்டிக்காட்டும்காண் *
  தக்கதறிதியேல் சந்திரா! சலம்செய்யாதே *
  மக்கட்பெறாத மலடனல்லையேல்வாகண்டாய்.
  4 57
  அழகியவாயில் அமுதவூறல்தெளிவுறா *
  மழலைமுற்றாதஇளஞ்சொல்லால் உன்னைக்கூவுகின்றான் *
  குழகன்சிரீதரன் கூவக்கூவநீபோதியேல் *
  புழையிலவாகாதே நின்செவிபுகர்மாமதீ!
  5 58
  தண்டொடுசக்கரம் சார்ங்கமேந்தும்தடக்கையன் *
  கண்துயில்கொள்ளக்கருதிக் கொட்டாவிகொள்கின்றான் *
  உண்டமுலைப்பாலறாகண்டாய் உறங்காவிடில் *
  விண்தனில்மன்னிய மாமதீ! விரைந்தோடிவா.
  6 59
  பாலகனென்று பரிபவம்செய்யேல் * பண்டொருநாள்
  ஆலினிலைவளர்ந்த சிறுக்கனவன்இவன் *
  மேலெழப்பாய்ந்து பிடித்துக்கொள்ளும்வெகுளுமேல் *
  மாலைமதியாதே மாமதீ! மகிழ்ந்தோடிவா.
  7 60
  சிறியனென்றுஎன்னிளஞ்சிங்கத்தை இகழேல்கண்டாய் *
  சிறுமையின்வார்த்தையை மாவலியிடைச்சென்றுகேள் *
  சிறுமைப்பிழைகொள்ளில் நீயும்உன்தேவைக்குரியைகாண் *
  நிறைமதீ! நெடுமால் விரைந்துஉன்னைக்கூவுகின்றான்.
  8 61
  தாழியில்வெண்ணெய் தடங்கையாரவிழுங்கிய *
  பேழைவயிற்றெம்பிரான்கண்டாய் உன்னைக்கூவுகின்றான் *
  ஆழிகொண்டுஉன்னையெறியும் ஐயுறவில்லைகாண் *
  வாழவுறுதியேல் மாமதீ! மகிழ்ந்தோடிவா.
  9 62
  மைத்தடங்கண்ணி யசோதைதன்மகனுக்கு இவை
  ஒத்தனசொல்லி உரைத்தமாற்றம் ஒளிபுத்தூர்
  வித்தகன்விட்டுசித்தன் விரித்ததமிழிவை *
  எத்தனையும்சொல்லவல்லவர்க்கு இடரில்லையே. (2)
  10 63
 • Naalaayira Divya Prabhandham

  Naalaayira Divya Prabhandham – Pasuram (44 – 53)

  Naalaayira Divya Prabhandham

  நாலாயிர திவ்ய பிரபந்தம்

  பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
  பெரியாழ்வார் திருமொழி
  முதற்பத்து
  மூன்றாம் திருமொழி – மாணிக்கம் கட்டி
  கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்
  மாணிக்கம்கட்டி வயிரம்இடைகட்டி *
  ஆணிப்பொன்னால்செய்த வண்ணச்சிறுத்தொட்டில் *
  பேணிஉனக்குப் பிரமன்விடுதந்தான் *
  மாணிக்குறளனே! தாலேலோ வையமளந்தானே! தாலேலோ. (2)
  1 44
  உடையார்கனமணியோடு ஒண்மாதுளம்பூ *
  இடைவிரவிக்கோத்த எழில் தெழ்கினோடு *
  விடையேறுகாபாலி ஈசன்விடுதந்தான் *
  உடையாய்! அழேல்அழேல்தாலேலோ உலகமளந்தானே! தாலேலோ.
  2 45
  என்தம்பிரானார் எழில்திருமார்வர்க்கு *
  சந்தமழகிய தாமரைத்தாளர்க்கு *
  இந்திரன்தானும் எழிலுடைக்கிண்கிணி *
  தந்துஉவனாய்நின்றான்தாலேலோ தாமரைக்கண்ணனே! தாலேலோ.
  3 46
  சங்கின்வலம்புரியும் சேவடிக்கிண்கிணியும் *
  அங்கைச்சரிவளையும் நாணும்அரைத்தொடரும் *
  அங்கண்விசும்பில் அமரர்கள்போத்தந்தார் *
  செங்கண்கருமுகிலே! தாலேலோ தேவகிசிங்கமே! தாலேலோ.
  4 47
  எழிலார்திருமார்வுக்கு ஏற்குமிவையென்று *
  அழகியஐம்படையும் ஆரமும்கொண்டு *
  வழுவில்கொடையான் வயிச்சிரவணன் *
  தொழுதுஉவனாய்நின்றான்தாலேலோ தூமணிவண்ணனே! தாலேலோ.
  5 48
  ஓதக்கடலின் ஒளிமுத்தினாரமும் *
  சாதிப்பவளமும் சந்தச்சரிவளையும் *
  மாதக்கவென்று வருணன்விடுதந்தான் *
  சோதிச்சுடர்முடியாய்! தாலேலோ சுந்தரத்தோளனே! தாலேலோ.
  6 49
  கானார்நறுந்துழாய் கைசெய்தகண்ணியும் *
  வானார்செழுஞ்சோலைக் கற்பகத்தின்வாசிகையும் *
  தேனார்மலர்மேல் திருமங்கைபோத்தந்தாள் *
  கோனே! அழேல்அழேல்தாலேலோ குடந்தைக்கிடந்தானே! தாலேலோ.
  7 50
  கச்சொடுபொற்சுரிகை காம்பு கனவளை *
  உச்சிமணிச்சுட்டி ஒண்தாள்நிரைப்பொற்பூ *
  அச்சுதனுக்கென்று அவனியாள்போத்தந்தாள் *
  நச்சுமுலையுண்டாய்! தாலேலோ நாராயணா! அழேல்தாலேலோ.
  8 51
  மெய்திமிரும்நானப்பொடியோடு மஞ்சளும் *
  செய்யதடங்கண்ணுக்கு அஞ்சனமும்சிந்துரமும் *
  வெய்யகலைப்பாகி கொண்டுஉவளாய்நின்றாள் *
  ஐயா! அழேல்அழேல்தாலேலோ அரங்கத்தணையானே! தாலேலோ.
  9 52
  வஞ்சனையால்வந்த பேய்ச்சிமுலையுண்ட *
  அஞ்சனவண்ணனை ஆய்ச்சிதாலாட்டிய *
  செஞ்சொல்மறையவர்சேர் புதுவைப்பட்டன்சொல் *
  எஞ்சாமைவல்லவர்க்கு இல்லைஇடர்தானே. (2)
  10 53
 • Naalaayira Divya Prabhandham

  Naalaayira Divya Prabhandham – Pasuram (23 – 43)

  Naalaayira Divya Prabhandham:

  பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
  பெரியாழ்வார் திருமொழி
  முதற்பத்து
  இரண்டாம் திருமொழி – சீதக்கடல்
  கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்
  சீதக்கடல் உள்ளமுதன்னதேவகி *
  கோதைக்குழலாள் அசோதைக்குப்போத்தந்த *
  பேதைக்குழவி பிடித்துச்சுவைத்துண்ணும் *
  பாதக்கமலங்கள் காணீரே பவளவாயீர்! வந்துகாணீரே. (2)
  1 23
  முத்தும்மணியும் வயிரமும்நன்பொன்னும் *
  தத்திப்பதித்துத் தலைப்பெய்தாற்போல் * எங்கும்
  பத்துவிரலும் மணிவண்ணன்பாதங்கள் *
  ஒத்திட்டிருந்தவா காணீரே ஒண்ணுதலீர்! வந்துகாணீரே.
  2 24
  பணைத்தோளிளவாய்ச்சி பால்பாய்ந்தகொங்கை *
  அணைத்தாரஉண்டு கிடந்தஇப்பிள்ளை *
  இணைக்காலில் வெள்ளித்தளை நின்றிலங்கும் *
  கணைக்கால் இருந்தவாகாணீரே காரிகையீர்! வந்துகாணீரே.
  3 25
  உழந்தாள்நறுநெய் ஓரோர்தடாவுண்ண *
  இழந்தாளெரிவினாலீர்த்து எழில்மத்தின் *
  பழந்தாம்பாலோச்சப் பயத்தால்தவழ்ந்தான் *
  முழந்தாள்இருந்தவாகாணீரே முகிழ்முலையீர்! வந்துகாணீரே.
  4 26
  பிறங்கியபேய்ச்சி முலைசுவைத்துண்டிட்டு *
  உறங்குவான்போலேகிடந்த இப்பிள்ளை *
  மறங்கொளிரணியன் மார்பைமுன்கீண்டான் *
  குறங்குகளைவந்து காணீரே குவிமுலையீர்! வந்துகாணீரே.
  5 27
  மத்தக்களிற்று வசுதேவர்தம்முடை *
  சித்தம்பிரியாத தேவகிதன்வயிற்றில் *
  அத்தத்தின்பத்தாநாள் தோன்றியஅச்சுதன் *
  முத்தமிருந்தவாகாணீரே முகிழ்நகையீர்! வந்துகாணீரே.
  6 28
  இருங்கைமதகளிறு ஈர்க்கின்றவனை *
  பருங்கிப் பறித்துக் கொண்டோடும் பரமன்தன் *
  நெருங்குபவளமும் நேர்நாணும் முத்தும் *
  மருங்கும் இருந்தவா காணீரே வாணுதலீர் வந்துகாணீரே.
  7 29
  வந்தமதலைக்குழாத்தை வலிசெய்து *
  தந்தக்களிறுபோல் தானேவிளையாடும் *
  நந்தன்மதலைக்கு நன்றுமழகிய *
  உந்திஇருந்தவாகாணீரே ஒளியிழையீர்! வந்துகாணீரே.
  8 30
  அதிரும்கடல்நிறவண்ணனை * ஆய்ச்சி
  மதுரமுலையூட்டி வஞ்சித்துவைத்த *
  பதரப்படாமே பழந்தாம்பாலார்த்த *
  உதரம்இருந்தவாகாணீரே ஒளிவளையீர்! வந்துகாணீரே.
  9 31
  பெருமாவுரலில் பிணிப்புண்டிருந்து * அங்கு
  இருமாமருதம் இறுத்தஇப்பிள்ளை *
  குருமாமணிப்பூண் குலாவித்திகழும் *
  திருமார்புஇருந்தவாகாணீரே சேயிழையீர்! வந்துகாணீரே.
  10 32
  நாள்களோர்நாலைந்து திங்களளவிலே *
  தாளைநிமிர்த்துச் சகடத்தைச்சாடிப்போய் *
  வாள்கொள்வளையெயிற்று ஆருயிர்வவ்வினான் *
  தோள்கள்இருந்தவாகாணீரே சுரிகுழலீர்! வந்துகாணீரே.
  11 33
  மைத்தடங்கண்ணி யசோதைவளர்க்கின்ற *
  செய்த்தலைநீலநிறத்துச் சிறுப்பிள்ளை *
  நெய்த்தலைநேமியும் சங்கும்நிலாவிய *
  கைத்தலங்கள் வந்துகாணீரே கனங்குழையீர்! வந்துகாணீரே.
  12 34
  வண்டமர்பூங்குழல் ஆய்ச்சிமகனாகக்
  கொண்டு வளர்க்கின்ற கோவலக்குட்டற்கு *
  அண்டமும்நாடும் அடங்கவிழுங்கிய *
  கண்டம்இருந்தவாகாணீரே காரிகையீர்! வந்துகாணீரே.
  13 35
  எந்தொண்டைவாய்ச்சிங்கம் வாவென்றெடுத்துக் கொண்டு *
  அந்தொண்டைவாயமுதாதரித்து * ஆய்ச்சியர்
  தம்தொண்டைவாயால் தருக்கிப்பருகும் இச்
  செந்தொண்டைவாய்வந்துகாணீரே சேயிழையீர்! வந்துகாணீரே.
  14 36
  நோக்கியசோதை நுணுக்கியமஞ்சளால் *
  நாக்குவழித்து நீராட்டும்இந்நம்பிக்கு *
  வாக்கும்நயனமும் வாயும்முறுவலும் *
  மூக்கும்இருந்தவாகாணீரே மொய்குழலீர்! வந்துகாணீரே.
  15 37
  விண்கொளமரர்கள் வேதனைதீர * முன்
  மண்கொள்வசுதேவர்தம் மகனாய் வந்து *
  திண்கொளசுரரைத் தேயவளர்கின்றான் *
  கண்கள்இருந்தவாகாணீரே கனவளையீர்! வந்துகாணீரே.
  16 38
  பருவம்நிரம்பாமே பாரெல்லாம்உய்ய *
  திருவின்வடிவொக்கும் தேவகிபெற்ற *
  உருவுகரிய ஒளிமணிவண்ணன் *
  புருவம்இருந்தவாகாணீரே பூண்முலையீர்! வந்துகாணீரே.
  17 39
  மண்ணும்மலையும் கடலும்உலகேழும் *
  உண்ணுந்திறத்து மகிழ்ந்துண்ணும்பிள்ளைக்கு *
  வண்ணமெழில்கொள் மகரக்குழையிவை *
  திண்ணம்இருந்தவாகாணீரே சேயிழையீர்! வந்துகாணீரே.
  18 40
  முற்றிலும்தூதையும் முன்கைம்மேல்பூவையும் *
  சிற்றிலிழைத்துத் திரிதருவோர்களை *
  பற்றிப்பறித்துக்கொண்டு ஓடும்பரமன்தன் *
  நெற்றிஇருந்தவாகாணீரே நேரிழையீர்! வந்துகாணீரே.
  19 41
  அழகியபைம்பொன்னின்கோல் அங்கைக்கொண்டு *
  கழல்கள்சதங்கை கலந்துஎங்குமார்ப்ப *
  மழகன்றினங்கள் மறித்துத்திரிவான் *
  குழல்கள்இருந்தவாகாணீரே குவிமுலையீர்! வந்துகாணீரே.
  20 42
  சுருப்பார்குழலி யசோதைமுன்சொன்ன *
  திருப்பாதகேசத்தைத் தென்புதுவைப்பட்டன் *
  விருப்பாலுரைத்த இருபதோடொன்றும்
  உரைப்பார்போய் வைகுந்தத் தொன்றுவர்தாமே. (2)
  21 43
 • Naalaayira Divya Prabhandham

  Naalaayira Divya Prabhandham (Pasuram 13-22)

  Naalaayira Divya Prabhandham

  முதலாயிரம்
  பெரியாழ்வார் திருமொழி
  முதற் பத்து
  பெரியாழ்வார் திருமொழி
  முதற்பத்து
  முதல் திருமொழி – வண்ண மாடங்கள்
  கண்ணன் திருவவதாரச் சிறப்பு
  வண்ணமாடங்கள்சூழ் திருக்கோட்டியூர் *
  கண்ணன்கேசவன் நம்பிபிறந்தினில் *
  எண்ணெய்சுண்ணம் எதிரெதிர்தூவிட *
  கண்ணன்முற்றம் கலந்துஅளராயிற்றே. (2)
  1 13
  ஓடுவார்விழுவார் உகந்தாலிப்பார் *
  நாடுவார்நம்பிரான் எங்குத்தானென்பார் *
  பாடுவார்களும் பல்பறைகொட்டநின்று *
  ஆடுவார்களும் ஆயிற்றுஆய்ப்பாடியே.
  2 14
  பேணிச்சீருடைப் பிள்ளைபிறந்தினில் *
  காணத்தாம்புகுவார் புக்குப்போதுவார் *
  ஆணொப்பார் இவன்நேரில்லைகாண் * திரு
  வோணத்தான் உலகாளுமென்பார்களே.
  3 15
  உறியைமுற்றத்து உருட்டிநின்றாடுவார் *
  நறுநெய்பால்தயிர் நன்றாகத்தூவுவார் *
  செறிமென்கூந்தல் அவிழத்திளைத்து * எங்கும்
  அறிவழிந்தனர் ஆய்ப்பாடியாயரே.
  4 16
  கொண்டதாளுறி கோலக்கொடுமழு *
  தண்டினர் பறியோலைச்சயனத்தர் *
  விண்டமுல்லை யரும்பன்னபல்லினர் *
  அண்டர்மிண்டிப்புகுந்து நெய்யாடினார்.
  5 17
  கையும்காலும்நிமிர்த்துக் கடாரநீர் *
  பையவாட்டிப் பசுஞ்சிறுமஞ்சளால் *
  ஐயநாவழித்தாளுக்கு அங்காந்திட *
  வையமேழும்கண்டாள் பிள்ளைவாயுளே.
  6 18
  வாயுள்வையகம்கண்ட மடநல்லார் *
  ஆயர்புத்திரனல்லன் அருந்தெய்வம் *
  பாயசீருடைப் பண்புடைப்பாலகன் *
  மாயனென்று மகிழ்ந்தனர்மாதரே.
  7 19
  பத்துநாளும்கடந்த இரண்டாநாள் *
  எத்திசையும் சயமரம்கோடித்து *
  மத்தமாமலை தாங்கியமைந்தனை *
  உத்தானம்செய்து உகந்தனர்ஆயரே.
  8 20
  கிடக்கில் தொட்டில்கிழியஉதைத்திடும் *
  எடுத்துக்கொள்ளில் மருங்கையிறுத்திடும் *
  ஒடுக்கிப்புல்கில் உதரத்தேபாய்ந்திடும் *
  மிடுக்கிலாமையால் நான்மெலிந்தேன்நங்காய்.
  9 21
  செந்நெலார்வயல்சூழ் திருக்கோட்டியூர் *
  மன்னுநாரணன் நம்பிபிறந்தமை *
  மின்னுநூல் விட்டுசித்தன்விரித்த * இப்
  பன்னுபாடல்வல்லார்க்கு இல்லைபாவமே. (2)
  10 22
   

  பெரியாழ்வார் திருவடிகளே சரணம்

 • Naalaayira Divya Prabhandham

  Naalaayira Divya Prabhandham (1-12 Paasuram)

  பெரியாழ்வார் அருளிச்செய்த திருப்பல்லாண்டு
  பல்லாண்டுபல்லாண்டு பல்லாயிரத்தாண்டு *
  பலகோடிநூறாயிரம்
  மல்லாண்டதிண்தோள்மணிவண்ணா. உன்
  செவ்வடிசெவ்விதிருக்காப்பு. (2)
  1 1
  அடியோமோடும்நின்னோடும் பிரிவின்றிஆயிரம்பல்லாண்டு *
  வடிவாய்நின்வலமார்பினில் வாழ்கின்றமங்கையும்பல்லாண்டு *
  வடிவார்சோதிவலத்துறையும் சுடராழியும்பல்லாண்டு *
  படைபோர்புக்குமுழங்கும் அப்பாஞ்சசன்னியமும்பல்லாண்டே.(2)
  2 2
  வாழாட்பட்டுநின்றீருள்ளீரேல் வந்துமண்ணும்மணமும்கொண்மின் *
  கூழாட்பட்டுநின்றீர்களை எங்கள்குழுவினில்புகுதலொட்டோம் *
  ஏழாட்காலும்பழிப்பிலோம்நாங்கள் இராக்கதர்வாழ்இலங்கை *
  பாழாளாகப்படைபொருதானுக்குப் பல்லாண்டுகூறுதமே.
  3 3
  ஏடுநிலத்தில்இடுவதன்முன்னம்வந்து எங்கள்குழாம்புகுந்து *
  கூடுமனமுடையீர்கள் வரம்பொழிவந்துஒல்லைக்கூடுமினோ *
  நாடும்நகரமும்நன்கறிய நமோநாராயணாயவென்று *
  பாடுமனமுடைப்பத்தருள்ளீர். வந்துபல்லாண்டுகூறுமினே.
  4 4
  அண்டக்குலத்துக்கதிபதியாகி அசுரரிராக்கதரை *
  இண்டைக்குலத்தைஎடுத்துக்களைந்த இருடீகேசன்தனக்கு *
  தொண்டக்குலத்திலுள்ளீர். வந்தடிதொழுது ஆயிரநாமம்சொல்லி *
  பண்டைக்குலத்தைத்தவிர்ந்து பல்லாண்டுபல்லாயிரத்தாண்டென்மினே.
  5 5
  எந்தைதந்தைதந்தைதந்தைதம்மூத்தப்பன் ஏழ்படிகால்தொடங்கி *
  வந்துவழிவழிஆட்செய்கின்றோம் * திருவோணத்திருவிழவில்
  அந்தியம்போதிலரியுருவாகி அரியையழித்தவனை *
  பந்தனைதீரப்பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்றுபாடுதமே.
  6 6
  தீயிற்பொலிகின்றசெஞ்சுடராழி திகழ்திருச்சக்கரத்தின் *
  கோயிற்பொறியாலேஒற்றுண்டுநின்று குடிகுடிஆட்செய்கின்றோம் *
  மாயப்பொருபடைவாணனை ஆயிரந்தோளும்பொழிகுருதி
  பாய * சுழற்றியஆழிவல்லானுக்குப் பல்லாண்டுகூறுதுமே.
  7 7
  நெய்யிடைநல்லதோர்சோறும் நியதமும்அத்தாணிச்சேவகமும் *
  கையடைக்காயும்கழுத்துக்குப்பூணொடு காதுக்குக்குண்டலமும் *
  மெய்யிடநல்லதோர்சாந்தமும்தந்து என்னைவெள்ளுயிராக்கவல்ல *
  பையுடைநாகப்பகைக்கொடியானுக்குப் பல்லாண்டுகூறுவனே.
  8 8
  உடுத்துக்களைந்த நின்பீதகவாடையுடுத்துக் கலத்ததுண்டு *
  தொடுத்ததுழாய்மலர்சூடிக்களைந்தன சூடும்இத்தொண்டர்களோம் *
  விடுத்ததிசைக்கருமம்திருத்தித் திருவோணத்திருவிழவில் *
  படுத்தபைந்நாகணைப்பள்ளிகொண்டானுக்குப் பல்லாண்டுகூறுதுமே.
  9 9
  எந்நாள்எம்பெருமான் உன்தனக்கடியோமென்றெழுத்துப்பட்ட
  அந்நாளே * அடியோங்களடிக்குடில் வீடுபெற்றுஉய்ந்ததுகாண் *
  செந்நாள்தோற்றித் திருமதுரையுள்சிலைகுனித்து * ஐந்தலைய
  பைந்நாகத்தலைபாய்ந்தவனே. உன்னைப்பல்லாண்டுகூறுதுமே.
  10 10
  அல்வழக்கொன்றுமில்லா அணிகோட்டியர்கோன் * அபிமானதுங்கன்
  செல்வனைப்போலத் திருமாலே. நானும்உனக்குப்பழவடியேன் *
  நல்வகையால்நமோநாராயணாவென்று நாமம்பலபரவி *
  பல்வகையாலும்பவித்திரனே. உன்னைப்பல்லாண்டுகூறுவனே. (2)
  11 11
  பல்லாண்டென்றுபவித்திரனைப்பரமேட்டியை * சார்ங்கமென்னும்
  வில்லாண்டான்தன்னை வில்லிபுத்தூர்விட்டுசித்தன்விரும்பியசொல் *
  நல்லாண்டென்றுநவின்றுரைப்பார் நமோநாராயணாயவென்று *
  பல்லாண்டும்பரமாத்மனைச் சூழ்ந்திருந்தேத்துவர்பல்லாண்டே. (2)
  12 12
 • Thiruppaavai

  Thiruppaavai

  Thiruppaavai

  ஆண்டாள் அருளிய திருப்பாவை

  மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;

  நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!

  சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!

  கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,

  ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,

  கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்

  நாரா யணனே, நமக்கே பறைதருவான்,

  பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய். (1)


  வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்

  செய்யுங் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்

  பையத் துயின்ற பரமன் அடிபாடி,

  நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலை நீராடி

  மையிட் டெழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்;

  செய்யா தனசெய்யோம்; தீக்குறளைச் சென்றோதோம்;

  ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி

  உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய். (2)


  ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி

  நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீர் ஆடினால்,

  தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து

  ஓங்கு பெருஞ்செந்நெ லூடு கயல் உகளப்

  பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,

  தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி

  வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்

  நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய். (3)


  ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்

  ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி,

  ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து

  பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்

  ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து,

  தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்

  வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்

  மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய். (4)


  மாயனை மன்னு வடமதுரை மைந்தனை,

  தூய பெருநீர் யமுனைத் துறைவனை,

  ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை,

  தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை,

  தூயோம்ஆய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது

  வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்

  போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

  தீயினில் தூசுஆகும் செப்பேலோ ரெம்பாவாய். (5)


  புள்ளும் சிலம்பினகாண்; புள்ளரையன் கோயிலில்

  வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?

  பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு,

  கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி,

  வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை,

  உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்

  மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்

  உள்ளம்புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய். (6)


  கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து

  பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!

  காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து

  வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்

  ஓசை படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ?

  நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி

  கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ?

  தேசமுடையாய்! திறவேலோ ரெம்பாவாய். (7)


  கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறுவீடு

  மேய்வான் பரந்தனகாண்; மிக்குள்ள பிள்ளைகளும்

  போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக்

  கூவுவான் வந்து நின்றோம், கோதுகலமுடைய

  பாவாய்! எழுந்திராய்; பாடிப் பறைகொண்டு

  மாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய

  தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்

  ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய். (8)


  தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய,

  தூமங் கமழத் துயிலணைமேல் கண்வளரும்

  மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்;

  மாமீர்! அவளை எழுப்பீரோ? உம்மகள்தான்

  ஊமையோ? அன்றிச் செவிடோ அனந்தலோ?

  ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?

  ‘மாமாயன், மாதவன், வைகுந்தன்’ என்றென்று

  நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய். (9)


  நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!

  மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?

  நாற்றத் துழாய்முடி நாரா யணன்நம்மால்

  போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்

  கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும்

  தோற்றம் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?

  ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!

  தேற்றமாய் வந்து திறவேலா ரெம்பாவாய். (10)


  கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து,

  செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்

  குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!

  புற்றர வல்குல் புனமயிலே! போதராய்,

  சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்

  முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,

  சிற்றாதே பேசாதே செல்லப்பெண் டாட்டிநீ

  எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய். (11)


  கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி

  நினைத்து முலைவழியே நின்றுபால் சோர

  நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!

  பனித்தலை வீழநின் வாசல் கடைபற்றிச்

  சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற

  மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்!

  இனித்தான் எழுந்திராய்; ஈதென்ன பேருறக்கம்?

  அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய். (12)


  புள்ளின்வாய் கீண்டானை, பொல்லா அரக்கனைக்

  கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்,

  பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்;

  வெள்ளி எழுந்து, வியாழம் உறங்கிற்று;

  புள்ளும் சிலம்பினகாண்; போதரிக் கண்ணினாய்!

  குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே,

  பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்

  கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய். (13)


  உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்

  செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின காண்;

  செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்,

  தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்;

  எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்

  நங்காய்! எழுந்திராய், நாணாதாய்! நாவுடையாய்!

  சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்

  பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய். (14)


  எல்லே இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?

  சில்லென் றழையேன்மின், நங்கைமீர்! போதர்கின்றேன்;

  ‘வல்லை, உன் கட்டுரைகள்! பண்டேஉன் வாயறிதும்!’

  ‘வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக!’

  ‘ஒல்லைநீ போதாய், உனக்கென்ன வேறுடையை?’

  ‘எல்லோரும் போந்தாரோ?’ ‘போந்தார், போந்து எண்ணிக்கொள்’

  வல்லானை கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க

  வல்லானை, மாயனைப் பாடேலோ ரெம்பாவாய். (15)


  நாயக னாய்நின்ற நந்தகோபனுடைய

  கோயில்காப் பானே! கொடித்தோன்றும் தோரண

  வாயில்காப் பானே! மணிக்கதவம் தாள்திறவாய்;

  ஆயர்சிறுமிய ரோமுக்கு அறைபறை

  மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்;

  தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்;

  வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா! நீ

  நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய். (16)


  அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்

  எம்பெருமான்! நந்தகோ பாலா! எழுந்திராய்;

  கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!

  எம்பெரு மாட்டி! யசோதாய்! அறிவுறாய்;

  அம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்த

  உம்பர்கோ மானே! உறங்காது எழுந்திராய்;

  செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!

  உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய். (17)


  உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்,

  நந்தகோ பாலன் மருமகளே! நப்பின்னாய்!

  கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்;

  வந்தெங்கும் கோழி அழைத்தனகாண்; மாதவிப்

  பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்;

  பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட,

  செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப

  வந்து திறவாய், மகிழ்ந்தேலோ ரெம்பாவாய். (18)


  குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்

  மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்

  கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்

  வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்;

  மைத்தடங் கண்ணினாய்! நீ உன் மணாளனை

  எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்,

  எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்,

  தத்துவம் அன்று தகவேலோ ரெம்பாவாய். (19)


  முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று

  கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்;

  செப்பம் உடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு

  வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்;

  செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல்

  நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்;

  உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை

  இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய். (20)


  ஏற்றகலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப

  மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்

  ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்;

  ஊற்றமுடையாய்! பெரியாய்! உலகினில்

  தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்;

  மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன்வாசற்கண்

  ஆற்றாதுவந்து உன்னடிபணியு மாபோலே,

  போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய். (21)


  அங்கண் மாஞாலத் தரசர் அபிமான

  பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே

  சங்கமிருப் பார்போல் வந்துதலைப் பெய்தோம்;

  கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே,

  செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ?

  திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்,

  அங்கணி ரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்

  எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய். (22)


  மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்

  சீரியசிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து,

  வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி,

  மூரிநிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்,

  போதருமா போலேநீ பூவைப்பூவண்ணா! உன்

  கோயில்நின்றும் இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய

  சீரியசிங் காசனத்திருந்து யாம்வந்த

  காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய். (23)


  அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி,

  சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல்போற்றி,

  பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி,

  கன்று குணிலா எறிந்தாய்! கழல்போற்றி,

  குன்று குடையா எடுத்தாய்! குணம்போற்றி,

  வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி,

  என்றென்று உன்சேவகமே ஏத்திப் பறைகொள்வான்

  இன்றுயாம் வந்தோம், இரங்கேலோ ரெம்பாவாய். (24)


  ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்

  ஒருத்தி மகனாய் ஒளித்து வளர,

  தரிக்கிலா னாகித் தான் தீங்கு நினைந்த

  கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்

  நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை

  அருத்தித்து வந்தோம்; பறைதருதி யாகில்

  திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி

  வருத்தமுந் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய். (25)


  மாலே! மணிவண்ணா! மார்கழிநீ ராடுவான்

  மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்

  ஞாலத்தை யெல்லாம் நடுங்குமுரல்வன

  பாலன்ன வண்ணத்துள் பாஞ்சசன்னியமே

  போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே,

  சாலப்பெரும் பறையே, பல்லாண் டிசைப்பாரே,

  கோல விளக்கே, கொடியே, விதானமே,

  ஆலின் இலையாய்! அருளேலோ ரெம்பாவாய். (26)


  கூடாரை வெல்லுஞ்சீர்க் கோவிந்தா! உன்தன்னை

  பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்;

  நாடு புகழும் பரிசினால் நன்றாக,

  சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே

  பாடகமே யென்றனைய பல்கலனும் யாம் அணிவோம்;

  ஆடை உடுப்போம்; அதன்பின்னே பாற்சோறு

  மூடநெய் பெய்து முழங்கை வழிவார

  கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய். (27)


  கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்;

  அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்தன்மைப்

  பிறவிப் பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்;

  குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடு

  உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது!

  அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்

  சிறுபேர ழைத்தனவும் சீறி யருளாதே,

  இறைவா, நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய். (28)


  சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்

  பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்;

  பெற்றம் மேய்த்துண்ணும் குலத்திற் பிறந்து நீ

  குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது;

  இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா!

  எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு

  உற்றோமே ஆவோம்; உனக்கே நா மாட்செய்வோம்;

  மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய். (29)


  வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்

  திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி

  அங்கப் பறைகொண்ட ஆற்றை, அணி புதுவைப்

  பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன

  சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே

  இங்கிப் பரிசுரைப்பார், ஈரிரண்டு மால்வரைத்தோள்

  செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்

  எங்கும் திருவருள்பெற் றின்புறுவ ரெம்பாவாய். (30)