• Guru

  பரஞ்சோதி பாபாவை பார்க்கலாம் வாங்க!

  paranjothi baba

  கல்யாண்குமார், பத்திரிகையாளர், எழுத்தாளர்

  டபழனி முருகன் கோயிலுக்குப் போகிறவர்கள், அதே தெருவில் கோயிலுக்கு முன்னதாக வலதுபுறம் பரஞ்சோதி பாபாவின் சிறிய அறையைப் பார்த்திருப்பார்கள். அவரது தீவிர பக்தர்களில் ஒருவர் இளையராஜா! அவர் உச்சத்தில் இருந்த நேரத்தில்கூட, அடைமழையிலும் வந்து பாபாவை தரிசித்துப் போவதை வழக்கமாகக் கொண்டிருந்தாராம்.

  அவரைத் தொடர்ந்து உலகப் பெற்ற டிரம்ஸ் சிவமணி, பாபாவின் டிவோட்டி. பத்து வருடங்களுக்கு முன், பாபா சமாதி அடைகிற நாளன்று அவரது விருப்பத்தின் பேரில் வடபழனியில் பாபாவின் முன்னிலையில் தன் கச்சேரியை நடத்தி இருக்கிறார். அந்தக் கச்சேரியில் சாக்ஸ் நாதனின் புல்லாங்குழல் இசையைக் கேட்டவாறே பாபா சமாதி அடைந்திருக்கிறார். இப்போது சாக்ஸ் நாதனும் பாபாவின் தீவிர டிவோட்டி.

  பாபாவை அடக்கம் செய்ய இடம் தேடியபோது பாபாவின் அன்பர் ஒருவர், ஸ்ரீபெரும்புதூர் அருகே சிப்காட் பகுதியில் அமைந்துள்ள பால் நல்லூர் கிராமத்தில் இருக்கும் தன் சொந்த இடத்தை கொடுத்திருக்கிறார். அங்கே அடக்கம் செய்யப்பட்ட பாபாவின் சமாதி இன்று அவரது டிவோட்டிகளின் ஆதரவோடு ஒரு ஆலயமாக உயர்ந்து நிற்கிறது.

  கடந்த பத்து வருடங்களாக அங்கே தினமும்  நூற்றுக்கணக்கானவர்களுக்கு அன்னதானம் தவறாமல் வழங்கப்படுகிறது. அவரது நினைவு தினத்தன்று வருடாவருடம் சிறப்பு பூஜைகள் நடைபெறுவதோடு, டிரம்ஸ் சிவமணி மற்றும் சாக்ஸ் நாதனின் கச்சேரிகளால் அந்த தினமே களைகட்டுகிறது.

  அவர் உயிரோடு வாழ்ந்த காலத்தில் வடபழனியில் இருந்த அவரது அறையில் அமைதியாக அமர்ந்தே இருப்பாராம். பக்தர்களிடம் அதிகம் பேசாத அவர், வருகிறவர்களின் பிரச்னைகளை முன்கூட்டியே தெரிந்து கொண்டு அதற்கு தீர்வளிப்பாராம். இப்போதும் பலரது கனவுகளில் வந்து ஆசீர்வதிப்பதாக நம்புகிறார்கள் அவரது பக்தர்கள்.

   நடிகர் மோகனும் பாபாவின் பக்தர்களில் ஒருவர். அடிக்கடி தன் மனைவியோடு வந்து பாபாவை தரிசித்துப் போவாராம். ஒருமுறை உடனடியாக அவரது மனைவியின் சொந்த நாடான ஆஸ்திரேலியாவுக்கு போக வேண்டிய நிர்பந்தம். ஆனால் வீட்டில் பீரோவில் வைத்திருந்த பாஸ்போர்ட்டை காணவில்லை. பீரோவையே தலைகீழாக புரட்டிப் போட்டுப் பார்த்தும் கிடைக்கவில்லை. மறுபடி விண்ணப்பித்தால் உடனடியாக கிடைக்க வாய்ப்பில்லை. கவலையோடு பாபாவிடம் போயிருக்கிறார் மோகன். பாபாவோ அமைதியாக,

   ’’பாஸ்போர்ட் வீட்டில்தான் இருக்கிறது, கவனமாக தேடிப்பார்’’ என்று சொல்லி இருக்கிறார். வீடு திரும்பிய மோகன், பீரோவை மறுபடி தீவிரமாக ஆராய்ந்தபோது இருவரின் பாஸ்போர்ட்டும் ஒரு இடுக்கில் சொருகிக் கொண்டிருந்தனவாம்!

  போன திமுக ஆட்சியில் நடந்த சம்பவம் இது. அண்ணாநகரில் வசிக்கும் மூத்த அமைச்சர் ஒருவர் அதே தெருவில் இருக்கும் ஒரு வீட்டின் மீது கண் வைத்திருக்கிறார். அங்கே வசிக்கும் வயதான தம்பதிகளிடம் அடிமாட்டு விலைக்கு அந்த வீட்டை கட்டாயமாக வாங்க முயற்சித்திருக்கிறார். விற்க மனசில்லாமலும் அமைச்சரை பகைத்துக் கொள்ள முடியாமலும் அந்த தம்பதி தவித்திருக்கிறார்கள். பாபாவைப் பற்றி யாரோ சொல்லி, அந்த தம்பதி பாபாவை நேரில் சந்தித்து தங்கள் பிரச்னையைச் சொல்லி இருக்கிறார்கள்.

  ‘’ நீங்கள் வீட்டுக்குப் போங்கள், எல்லாம் நல்லபடியாக  நடக்கும்’’ என்று சொல்லி பாபா அவர்களை நம்பிக்கை அளித்து அனுப்பி இருக்கிறார்.

  என்ன அதிசயம்! ஒரு வருடமாக இழுத்துக் கொண்டிருந்த அந்த அமைச்சர் பிரச்னை ஒரே நாளில் முடிவுக்கு வந்திருக்கிறது!

  மறுநாள் வீட்டுக்கு வந்த அமைச்சரின் ஆட்கள். ‘’உங்கள் வீட்டை வாங்க வேண்டாம் என்று அமைச்சருக்கு மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்திருக்கிறது, அதனால் உங்கள் பத்திரமெல்லாம் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் ‘’ என்று சொல்லி கட்டாயமாக வாங்கிப் போன ஒரிஜனல் பத்திரங்களை திருப்பிக் கொடுத்துவிட்டுப் போயிருக்கின்றனர்.

  ஒரே நாளில் அந்த ’மேலிட உத்தரவை’ பாபா பிறப்பித்ததாகவே அந்த தம்பதி நம்புகிறார்கள். பாபா மீது அவர்களுக்கு இருந்த அதே நம்பிக்கை இன்றும் தொடர்கிறது. அவரது சமாதியில் நடக்கும் அன்னதானத்திற்கு அந்த தம்பதிகளின் பங்களிப்பாக அரிசி மூட்டைகள் மாதாமாதம் வந்து இறங்குகின்றன.

  ரம்மி படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான பாலகிருஷ்ணன், மாதம் இருமுறையாவது பாபாவை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். ’’ அங்கே போய் ஒரு மணி நேரம் இருந்து விட்டு அன்னதானம் சாப்பிட்டு வந்தால் மனதுக்கு அமைதி கிடைக்கிறது. அது உலகில் வேறு எங்குமே கிடைக்காத ஒன்று’’ என்கிறார் அவர்.

  சினிமாக்காரர்கள் மட்டுமின்றி தமிழகம் முழுக்க இருந்தும் பலவிதமான தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் பாபாவை தரிசிக்க வந்து போகிறார்கள், அங்கே லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டிருக்கிற, சேரில் அமர்ந்திருக்கிற மாதிரியான பாபாவின் சிலை, தத்ரூபமாக பாபாவே நேரில் காட்சி அளிக்கிற மாதிரி இருப்பது, இதன் விசேஷம்.

   நீங்களும் ஒருமுறை பாபாவைப் பார்க்கலாம் வாருங்களேன். . .